Saturday, September 28, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 20: சேர்வையாட்டம் / குரும்பக் கூத்து

சேர்வை என்ற இசைக்கருவியை அடித்து ஆடும் ஆட்டம் சேர்வையாட்டம் எனப்படும். 

குரும்பர்கள் நிகழ்த்தும் இக்கலை குரும்பக் கூத்து, குரும்பராட்டம், சேர்வைக் கூத்து என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது.



மலைவாழ் மக்களில் ஒருவராகக் கருதப்படும் குரும்பர்கள் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

குரும்பர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்களின் முக்கிய தெய்வம் வீரபத்திரக் கடவுள். 

குரும்பர்களின் பூசாரி, அந்த இனத்தைச் சார்ந்த ஒருவரின் தலையில் தேங்காயை அடித்தல் ‘தலைக்காய் உடைத்தல்’ எனப்படும். 

சேர்வையாட்டத்துக்குரிய முக்கிய இசைக்கருவி சேர்வை. இது மட்டுமின்றி புல்லாங்குழல், ஜால்ரா, கிலுகிலுப்பை ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. 

சேர்வையாட்டத்தை ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். ஆடும் கலைஞர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இக்கலை நிகழ்ச்சியில் 6 முதல் 12 கலைஞர்கள் வரை பங்கு கொள்கின்றனர்.

சேர்வையாட்டத்தின்போது பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் விழா நிகழும் கோவில் தொடர்பானதாக இருக்கும். 

முக்கியமாக வீரபத்திரசாமி பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. 

மேலும் பஞ்ச பாண்டவர் வன வாசம், காமாட்சி அம்மன் விருத்தம், மன்மதன் கதை, நடராசர் பத்து ஆகிய பாடல்களும் தெம்மாங்கு, கும்மிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இடையிடையே சில நகைச்சுவைப் பாடல்களையும் பாடுகின்றனர். 


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 19: கொக்கலிக்கட்டை ஆட்டம்

மரத்தாலான நீண்ட கட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆகும். 

காலில் கட்டும் கட்டை, கொக்கு என்ற பறவையின் நீண்ட கால்களைப் போல் இருப்பதாலும், இந்தக் கால்கள் மரக்கட்டையால் ஆனதாலும் இது கொக்குக் கால் கட்டை ஆட்டம் என வழஙகப்படுகிறது.



பேச்சுவழக்கில் கொக்கிலிக்கட்டை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கலை வேலுர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்றது. 

கோவில் கலையான இக்கலை பொதுவிழாக்களிலும், சமூக விழாக்களிலும் ஆடப்படும் நிலைக்குப் பரந்துவிட்டது.

இது கங்கையம்மன் கோவில் விழாவுடன் தொடர்புடைய கலை. கங்கையம்மனுக்கு நேர்ந்தவர்களே இந்த ஆட்டத்தை ஆடுகின்றனர். 

ஆட்டகாரர்கள் விரதம் இருப்பர்.  இதற்கு வயது வரம்பு இல்லை. உடல் வலிமையே முக்கியம். 

ஆடுகிறவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப் படையில் இருக்கும். இக்கலைக்குரிய இசைக்கருவிகள் தப்பு, சட்டி, டோலக் (டோல்) ஆகியன. 

ஆட்டக்காரர்கள் எத்தனை பேராயினும் இசைக்கலைஞர்கள் நான்கு பேர்களே இருப்பர்.

கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டை 60 செ.மீ முதல் 150 செ.மீ உயரமுடையதாக இருக்கும். 

கொக்கலிக்கட்டை ஆல், கல்யாண முருங்கை, தணக்கு, நுளா, அகத்தி முதலிய மரங்களிலிருந்து செய்யப்படுகிறது. 

கொக்கலிக்கட்டை நின்று ஆட வலிமையுடையாதுதானா என்பதைப் பரிசோதித்த பின்பே அதைப் பயன்படுததுவர். 

இந்தக் கட்டையில் வண்ணத்தாள் ஒட்டியோ, சாயம் பூசியோ அழகுபடுத்துகின்றனர்.

ஆட்டக்காரர்கள் தங்களுடைய கையை நீளமாக நிட்டினால் எவ்வளவு இடம் கிடைக்குமோ அதனையே ஆட்ட இடமாகக் கொள்வர்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Thursday, September 19, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 18: கைச்சிலம்பாட்டம்

காலில் அணியும், ஒலிக்கும் சிலம்புகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு ஆடும் கலை கைச்சிலம்பாட்டம் எனப்படும். 

கண்ணகி மதுரையை எரித்தபோது கையில் வைத்திருந்த ஒரு கால் சிலம்பு போல இக்கலைஞர்கள் கைகளில் சிலம்பு வைத்துக்கொண்டு ஆடுவர்.



சிலம்பு என்ற இசைக்கருவியைக் கைகளில் வைத்திருபபதால் இது கைச்சிலம்பாட்டம் என்ற பெயர் பெற்றது. இது பம்பைச் சிலம்பாட்டம், என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 

தமிழகத்தில் உள்ள போர்க்கலையான சிலம்பாட்டத்திலிருந்து வேறுபடுத்துவதற்காக இதனைக் கைச்சிலம்பாட்டம் என அழைத்தனர் என்றும் கூறப்படுகிறது. 

கைச்சிலம்பாட்டம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் , தர்மபுரி, தென் ஆற்காடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. 

இது கோவில் சார்ந்த கலை. கோவிலின் வழிபாட்டுக் கூறுகளுள் ஒன்றாக, கோவில் தெய்வத்தின் புகழ்பாடும் கலை என்ற அளவில் இது மதிக்கப்படுகிறது. 

இது அம்மன் கோவிலில் நிகழ வேண்டிய கலையாக இருப்பினும் வேறு சூழல்களிலும நட்சத்திர நாள், தைப்பூசம் ஆகியவற்றின்போது காவடி ஆட்டத்திற்குத் துணை ஆட்டமாகவும், வாழ்க்கை வட்டச் சடங்குகளில் ஒன்றான காதணி விழாவின்போதும், திருமண மாப்பிள்ளைக்கு நேர்ச்சைக்காகக் கரகம் எடுத்து ஊர்வலம் வரும்போதும், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

கலை விழாக்களிலும், பொது மேடைகளிலும் இக்கலையை நிகழ்த்துகின்றனர். கைச்சிலம்பம் மற்றும் பம்பையும் இக்கலைக்குரிய இசைக்கருவிகள். 

இந்த இசைக்கருவிகளின் பெயரால் இது வழங்கப்படுவது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டும். இவ்விரு இசைக்கருவிகளில் கைச்சிலம்பை இக்கலையின் ஆதாரக் கருவியாகக் கொள்கின்றனர். 

பம்பையைப் பொதுவான கருவியாகக் கருதுகின்றனர். இக்கலையை நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கை, வரையறைக்கு உட்பட்டதல்ல. பொதுவாக இருவரோ, நால்வரோ, அறுவரோ, எண்மரோ ஆடுகின்றனர். 

இக்கலையை நிகழ்த்துவதற்கு என்று வயது வரம்பு இல்லை. ஆடுவதற்கு வலிமையுடையவர் யாராக இருப்பினும் ஆடலாம்.

இக்கலையை முதிய கலைஞர்களிடமிருந்து முறையாகப் பயில்கின்றனர். பயில்வதற்கும் கலை வரையறை இல்லை. கைச்சிலம்புக் கலைஞர்களுக்கு என்று தனியான ஒப்பனை ஏதும் இல்லை. ஆட்டக்காரர்கள் காலில் சலங்கைகளைக் கட்டியிருப்பர்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Sunday, September 15, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 17: கூத்து என்ற நாடகம்

நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து  என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் கூத்தர் எனப்பட்டனர். 

நாடக மேடையோ காட்சித் திரையோ இல்லாமல் எளிய முறையில் திறந்த வெளியில்  தெருவிலே நடத்தப்படும் நாடோடிக்கலையே கூத்து ஆகும்.



பழமையின் சின்னமாகவும் பண்பாட்டின் எச்சமாகவும் விளங்கும் கூத்துக் கலையானது நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள், செயல், பண்பாடு வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டுகிறது.

கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து என்பது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.

தெருக்கூத்து என்பது கிராமங்களில் திறந்த வெளிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் புறக்கூத்து கலைவடிவம் ஆகும்.

"கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்" என்ற பழமொழி ஒன்று உண்டு. கூத்து விடிய விடிய நடைபெறுவதை இது குறிக்கும்.

பாரதக்கதை, இராமாயணக்கதை, அரிச்சந்திரன் கதை  போன்றவற்றை தெருக்கூத்தாக நடிப்பார்கள். ஆடலும் பாடலும் கூத்தின் முக்கிய அம்சமாகும்.

மழையை விரும்புவோர் விராட பருவத்தையும், மணம் விரும்புவோர் மீனாட்சு கல்யாணத்தையும், பிள்ளை பேறு வேண்டுவோர் சத்தியவான் சாவித்திரியையும் கூத்தாக நடத்துவர்.

கோவிலோடு தொடர்புடைய கூத்துகள் திறந்த வெளியில் மின்விளக்கு இல்லாத முச்சந்திகளில் நடைபெறும்.

குடும்பத்தில் யாரேனும் இறந்து போனால் அக் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கேற்ப கர்ண மோட்சம் என்ற சில கூத்துகளை ஆடுகின்றனர்.

தெருக்கூத்தின் சிறப்பம்சமே அது இன்றைய நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையானது. முழுவதும் பாடல்களால் அமைந்து ஏட்டிலன்றி வெறும் வாய்மொழி மரபாகவே போற்றப்பட்டது.

கூத்தில் பல்வேறு வகையுண்டு. ஆடும் மக்களின் வாழ்க்கை முறை இடம் கருப்பொருள் என கருத்துகளுக்கு ஏற்ப கூத்தின் வகைகள் மாறுபடும். அவற்றில் சில:

அம்மன் கூத்து:
அம்மனைப்போல வேடம் அணிந்து அம்மன் கோவில்களில் ஆடுவதால் அம்மன் கூத்து என்று பெயர்.

அனுமன் ஆட்டம்:
அனுமன் ஆட்டம் என்பது, இராமாயண அனுமனைப் போல் வேடம் புனைந்து ஆடும் ஆட்டமாகும். 

ஆலி ஆட்டம்:
ஆலி ஆட்டம் என்பது, ஆலி எனப்படும் பூத வடிவில் அமைந்த உள்ளீடற்ற ஒரு உருவ வடிவுக்குள் ஒரு மனிதன் நுழைந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். இந்த ஆலிகள் மூங்கிலாலும், காகிதத்தாலும் செய்யப்பட்டிருக்கும்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...