தட்சிணாயன புண்ணிய காலம், தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும்.
பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். இந்த சமயத்தில் ஜீவாதார சக்தி மிகுந்து காணப்படுவதால் தான், விவசாயத்தில் விதை தெளிப்புக்கு ஏற்ற மாதமாக கருதப்பட்டு ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி வந்தது.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதன்படி பார்த்தால் ஆடி மாதத்தில் தேவர்களின் மாலை நேரம் தொடங்குகிறது.
சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை ‘கற்கடக’ மாதம் என்றும் சொல்வதுண்டு.
கடக ராசி சந்திரனுக்குரியது. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் (ஒன்று சேருவதால்), ஆளுமை பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.
எனவே சிவனை விட அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது.
ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோவில்கள், குறிப்பாக மாரியம்மன் கோவில்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்று காணப்படும். கூழ் வார்த்தலும், பூக்குழி இறங்குதலுமாக ஆலயமே களை கட்டி விடும். விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதம் இது. இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திப்பூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது?
ஆடி மாதம் மழைக் காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும் வாய்ப்புண்டு. வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.
வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’ என்று சொல்லப்படுகிறது.
ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பவுர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
Collected from Social Media...
No comments:
Post a Comment