Saturday, June 29, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 8 - காவடியாட்டம்

காவடியாட்டம்

முருகன் வழிபாட்டில் சடங்காக நிகழ்த்தப்பட்டு வரும் காவடி எடுத்தல் சடங்கே பின்னாளில் காவடியாட்டம் என்ற கலைவடிவமாக மாறி வளர்ந்துள்ளது.



இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார்.

இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. 

முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. 

கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். 

காவடியாட்டம் ஆடும் கலைஞரின் திறன் வெளிப்பாட்டிற்கேற்ப அதாவது காவடியைத் தலையில் வைத்து ஆடுவது, கழுத்தில் வைத்து சுழற்றுவது, உடல்முழுக்கக் காவடியை நகர்த்திச் செல்வது, வளைந்து வயிற்றில் வைத்து ஆடச்செய்வது போன்றவற்றிற்கேற்பப் பார்வையாளரின் கருத்தைக் கவரும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 7 - தப்பாட்டம் / பறையாட்டம்

தப்பாட்டம் / பறையாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய நடனம் ஆகும். தப்பு என்னும் தோலிசைக் கருவியை அடித்து இசையெழுப்பி அதற்கேற்ப ஆடும் ஆட்டம் தப்பாட்டம் ஆகும்.



இது பறையாட்டம், பறைமேளம், பறையடித்தல், தப்படித்தல் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.

ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. 

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது.

பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.  

இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்.

தப்பாட்டம் ஆடுவோர் நேர்வரிசையிலும் எதிர்எதிராக நின்றும் வட்டமாகவும் ஆடுகின்றனர். சுழன்று ஆடுதல், குதித்தல், பல்டி அடித்தல் போன்ற விறுவிறுப்பான ஆட்டமுறைகளும் பின்பற்றப்படுகிறது.

கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. 

ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 6 - பொம்மலாட்டம்

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது.

இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு.

பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து  என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

மிகவும் மெல்லிய நூல்களைக் பொம்மைகளில் இருந்து கட்டித் தொங்கவிட்டு அவற்றை இயக்குவதற்கு தனித் திறமை வேண்டும்.

பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும்.

குறிப்பாகத் தமிழகத்தில் ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு.

இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 5 - பொய்க்கால் குதிரை

பொய்க்கால் குதிரை

பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது.



இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இதில் ஆடும் ஆணும் பெண்ணும் ராஜா ராணி போல ஒப்பனை செய்து நடனமாடுவது வழக்கம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது.

இதில் 1.25 அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். 

இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். 

பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர். 

மேலும் குதிரையை அடக்குவது போலவும் நடன அமைப்புகள் இருக்கும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை


Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...