Tuesday, July 30, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 12 - ராஜா ராணி ஆட்டம்

ராஜாராணி ஆட்டம் என்பது கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இது நிகழ்கிறது. 

ராஜாவும், ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சியாதலால், இதனை ராஜா ராணி ஆட்டம் என்பர். 



பொழுது போக்கு சார்ந்த இந்நிகழ்ச்சியானது, தஞ்சை மாவட்டப் பகுதியிலேயே நிகழ்ந்தது. 

ராஜாவும் ராணியும் சந்தித்து வழக்காடுவது, பின்னர் திருமணம் செய்து கொள்வது ஆகிய நிகழ்ச்சிகள், பாட்டும் உரையாடலுமாக, இக்கலை நடக்கும். 

தென் தமிழகத்தின் சில பகுதிகளில் ராஜா ராணி ஆட்டம் நடத்தப்படுகிறது. 

அங்கு நடக்கும் இந்த ஆட்டத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுகின்றனர். 

இதற்காக இந்த ஆண்கள் நீண்ட கேசம் வளர்க்கின்றனர். 

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 11 - புலி ஆட்டம்

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். 

வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். 

இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

புலி பற்றிய அறிவும், புலியின் இயல்பும் புலியாட்டத்தை ஆடுபவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், மனிதனின் ஆட்டத்தை மனிதன் பார்த்து ஆடும் ஆட்டமல்ல; புலியின் இயல்பை மனிதன் கற்று ஆடப்படும் ஆட்டம்.

புலியாட்டக்காரர் புலியின் செய்கைகளை, இயல்புகளை தன் கைகளின் அசைவுகளாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்தித் தன்னை ஒரு புலியாக பார்ப்பவர் உள்ளங்களில் நிலை நிறுத்துவார்.

புலி போல உறுமிக்கொண்டு பதுங்கியும், அங்கும் இங்கும் பாய்ந்தும் ஆடும் ஆட்டம் பயத்தை உண்டாக்கினாலும் ரசிக்ககூடியதாக இருக்கும். சிறுவர்களை அதிகம் கவரும்.

தரையோடு தரையாக பதுங்குவது, ஒளிவது, உடம்பையும் பாதங்களையும் நக்குவது போன்ற அசைவுகளை மேலத்தாளத்திற்கு ஏற்ப செய்து காட்டுவார்கள்.

புலியாட்டம் சிலம்பாட்டத்துடன் கலந்து ஆடும் பழக்கமும் உள்ளது. ஒன்று முதல் நான்கு வரை உள்ள சிலம்பாட்ட அடிகள் அப்படியே புலியாட்டத்தில் இடம் பெறுகின்றன. அதனால் தான் சிலம்பாட்டத்திற்குரிய பக்க இசை அப்படியே புலி ஆட்டத்திற்கும் பொருந்துகிறது. 

புலி ஆட்ட கலைஞரும், சிலம்பாட்ட கலைஞரும் உபயோகிக்கும் கால் வைப்பு முறைகளும் ஒன்றாகவே இருக்கும். புலியின் மிக மெதுவான பம்முதலையும் மிக விரைந்த பாய்ச்சலையும் இந்த கால் வைப்பு முறை பிரதிபலிக்கிறது.

புலிக்கு இரட்டை வால் இல்லை. ஆனால் புலிவேடம் போடும் கலைஞர்களில் சிலர் இரட்டைவால் கட்டும் பழக்கம் தென் தமிழகத்தில் உள்ளது. ஒருவர் இரட்டை வால் கட்டினால் தன்னை எதிர்க்க யாருமில்லை என்று சவால் விடுவதாக பொருள். 

இரட்டை வால் கட்டி வருவோருக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அவற்றில் வெற்றி பெறுபவரே இரடைவால் கட்டத் தகுதியுடையவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

சேலம் பகுதிகளில் உள்ள புலி ஆட்டக்கலைஞர்கள் பக்க இசையில் வாசிக்கப்படும் தாளப்போக்கிற்கேற்ப ஆடுவார்கள். பெரும்பாலும் சிலம்பாட்ட கால்வைப்பு முறைகளையே பின்பற்றுவார்கள். 

சென்னைப்பகுதிகளில் உள்ள கலைஞர்கள் புலியின் செயல்களைப்போலவே அதிகம் செய்வார்கள். தாக்க வருபவரை அடித்து குதறுதல் போன்ற செயல்களை செய்வார்கள். 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கலைஞர்கள் முதலில் தரையைத் தொட்டு வணங்கி பின்பு ஆட்டத்தை தொடங்குவார்கள்.

புலிவேடம் போட நாமக்கட்டியை நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். அது உலர்ந்தபின் அதன் மேல் பிற வண்ணங்களைப் பூசுவர். வேறு சிலர், முதல் நாள் வடித்த அரிசிக்கஞ்சியில் கருவேல மரப்பிசினை கலந்து ஊறவைத்து அதில் வண்ணங்களை குழைத்து பூசிக்கொள்வர். 

புலி வேடத்திற்கு வண்ணம் பூச பிரத்யேக ஒப்பனைக்காரர்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் புலி வேடக்காரர்களே ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து கொள்வதும் உண்டு. இந்த வேலைக்கு பல மணிநேரங்கள் கூட ஆகும். புலியின் உடல் வண்ணங்களை போலவே மஞ்சள் நிறமும் கருப்பு வரிகளும் தீட்டப்படும்.

புலியாட்டம் எந்த எதிர்ப்பும் இன்றி முடிந்தாலோ இல்லை எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று கடைசி நிலை அடைந்தால் வெற்றி பெற்றவர் புலி வேசத்துடன் ஒரு ஆட்டு கெடாவை பல்லால் தூக்கி எரிவது வெற்றியின் அடையாளம் ஆகும்.

தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் புலியாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறன. புலியாட்டம் சாதி, சமய, இன, மொழி எல்லை ஆகியவற்றை கடந்து ஆடப்படும் ஆட்டம்.

பெரும் பாலும் புலி வேசம் கட்டி ஆடுபவர் தற்காப்பு கலை சொல்லு தரும் ஆசானாகவே இல்லை சிறந்த மாணவனாகவே இருப்பார்கள்.

புலியாட்டம் உருமி நையாண்டி மேளத்துடன் ஆடப் படும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Wednesday, July 24, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 10 - சிலம்பாட்டம்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை,கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.



வரலாறு
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். 

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாகவளர்ச்சி பெற்றது. இதுவே பின்னர் சிலம்புக் கலையாகவளர்ச்சி பெற்றது. 

பெயர் காரணம்
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும்ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது.

இலக்கியக் குறிப்புகள்
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். 

சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒருகடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. 

திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது.

திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள்அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பின் உட்கூறுகள்
மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும்.

சிலம்பத்தடி
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பாட்ட வகைகள்
துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியனவாகும்.

சிலம்பாட்டச் சுற்று முறைகள்
சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.

பயன்கள்
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும்இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

Wednesday, July 10, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 9 - வில்லுப்பாட்டு(வில்லிசை)

வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது.  பல துணை இசைக்கருவிகள்  இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. 



துணை இசைக்கருவிகள் 
உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

தோற்றம்
வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். 

அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.

அமைப்பு :
வில்லுப்பாட்டின் கட்டமைப்பை பொறுத்து அதனை ஏழு வகைகளாக வகுக்கலாம்.

காப்பு விருத்தம் :
இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.

வருபொருள் உரைத்தல் :
குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.

குருவடி பாடுதல் :
தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.

அவையடக்கம் :
கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள
வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.

நாட்டு வளம் :
கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.

கதைக்கூறு :
நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.

வாழிபாடுதல் :
இறுதிப் பகுதியாக வாழ்த்துப்பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...