Tuesday, July 30, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 11 - புலி ஆட்டம்

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். 

வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். 

இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

புலி பற்றிய அறிவும், புலியின் இயல்பும் புலியாட்டத்தை ஆடுபவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், மனிதனின் ஆட்டத்தை மனிதன் பார்த்து ஆடும் ஆட்டமல்ல; புலியின் இயல்பை மனிதன் கற்று ஆடப்படும் ஆட்டம்.

புலியாட்டக்காரர் புலியின் செய்கைகளை, இயல்புகளை தன் கைகளின் அசைவுகளாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்தித் தன்னை ஒரு புலியாக பார்ப்பவர் உள்ளங்களில் நிலை நிறுத்துவார்.

புலி போல உறுமிக்கொண்டு பதுங்கியும், அங்கும் இங்கும் பாய்ந்தும் ஆடும் ஆட்டம் பயத்தை உண்டாக்கினாலும் ரசிக்ககூடியதாக இருக்கும். சிறுவர்களை அதிகம் கவரும்.

தரையோடு தரையாக பதுங்குவது, ஒளிவது, உடம்பையும் பாதங்களையும் நக்குவது போன்ற அசைவுகளை மேலத்தாளத்திற்கு ஏற்ப செய்து காட்டுவார்கள்.

புலியாட்டம் சிலம்பாட்டத்துடன் கலந்து ஆடும் பழக்கமும் உள்ளது. ஒன்று முதல் நான்கு வரை உள்ள சிலம்பாட்ட அடிகள் அப்படியே புலியாட்டத்தில் இடம் பெறுகின்றன. அதனால் தான் சிலம்பாட்டத்திற்குரிய பக்க இசை அப்படியே புலி ஆட்டத்திற்கும் பொருந்துகிறது. 

புலி ஆட்ட கலைஞரும், சிலம்பாட்ட கலைஞரும் உபயோகிக்கும் கால் வைப்பு முறைகளும் ஒன்றாகவே இருக்கும். புலியின் மிக மெதுவான பம்முதலையும் மிக விரைந்த பாய்ச்சலையும் இந்த கால் வைப்பு முறை பிரதிபலிக்கிறது.

புலிக்கு இரட்டை வால் இல்லை. ஆனால் புலிவேடம் போடும் கலைஞர்களில் சிலர் இரட்டைவால் கட்டும் பழக்கம் தென் தமிழகத்தில் உள்ளது. ஒருவர் இரட்டை வால் கட்டினால் தன்னை எதிர்க்க யாருமில்லை என்று சவால் விடுவதாக பொருள். 

இரட்டை வால் கட்டி வருவோருக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அவற்றில் வெற்றி பெறுபவரே இரடைவால் கட்டத் தகுதியுடையவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

சேலம் பகுதிகளில் உள்ள புலி ஆட்டக்கலைஞர்கள் பக்க இசையில் வாசிக்கப்படும் தாளப்போக்கிற்கேற்ப ஆடுவார்கள். பெரும்பாலும் சிலம்பாட்ட கால்வைப்பு முறைகளையே பின்பற்றுவார்கள். 

சென்னைப்பகுதிகளில் உள்ள கலைஞர்கள் புலியின் செயல்களைப்போலவே அதிகம் செய்வார்கள். தாக்க வருபவரை அடித்து குதறுதல் போன்ற செயல்களை செய்வார்கள். 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கலைஞர்கள் முதலில் தரையைத் தொட்டு வணங்கி பின்பு ஆட்டத்தை தொடங்குவார்கள்.

புலிவேடம் போட நாமக்கட்டியை நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். அது உலர்ந்தபின் அதன் மேல் பிற வண்ணங்களைப் பூசுவர். வேறு சிலர், முதல் நாள் வடித்த அரிசிக்கஞ்சியில் கருவேல மரப்பிசினை கலந்து ஊறவைத்து அதில் வண்ணங்களை குழைத்து பூசிக்கொள்வர். 

புலி வேடத்திற்கு வண்ணம் பூச பிரத்யேக ஒப்பனைக்காரர்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் புலி வேடக்காரர்களே ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து கொள்வதும் உண்டு. இந்த வேலைக்கு பல மணிநேரங்கள் கூட ஆகும். புலியின் உடல் வண்ணங்களை போலவே மஞ்சள் நிறமும் கருப்பு வரிகளும் தீட்டப்படும்.

புலியாட்டம் எந்த எதிர்ப்பும் இன்றி முடிந்தாலோ இல்லை எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று கடைசி நிலை அடைந்தால் வெற்றி பெற்றவர் புலி வேசத்துடன் ஒரு ஆட்டு கெடாவை பல்லால் தூக்கி எரிவது வெற்றியின் அடையாளம் ஆகும்.

தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் புலியாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறன. புலியாட்டம் சாதி, சமய, இன, மொழி எல்லை ஆகியவற்றை கடந்து ஆடப்படும் ஆட்டம்.

பெரும் பாலும் புலி வேசம் கட்டி ஆடுபவர் தற்காப்பு கலை சொல்லு தரும் ஆசானாகவே இல்லை சிறந்த மாணவனாகவே இருப்பார்கள்.

புலியாட்டம் உருமி நையாண்டி மேளத்துடன் ஆடப் படும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...