Thursday, October 24, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 24: சாமியாட்டம்

சாமியாடுதல் என்பது கிராமங்களில் காணப்படும் ஒருவித வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட சிறு மற்றும் பெருந்தெய்வம் ஒன்றின் சக்தி ஒருவர்மீது ஆட்கொள்ளப்படுவதாக இம்முறை கருதப்படுகிறது. 

அவ்வாறு சக்தியேறப் பெற்றவர் அருளாடி அல்லது சாமியாடி என்று அழைக்கப்படுவார். தெய்வத்திற்குச் செய்யும் அலங்கார, அர்ச்சனைகளை சாமியாடிக்கும் செய்வர்.



வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டி அருளாடியிடம் குறைகளைக் கூறுவார்கள். தன்வயம் இழந்த ஆவேச நிலையில் அவர் அக்குறைகளுக்குத் தீர்வோ பரிகாரமோ சொல்லுவார். 

பெரும்பாலும் சாமியாடுபவர்களே கேட்பவர்களின் உளக்குறிப்புணர்ந்து அவர்களுடைய குறைகளைச் சொல்லி விடுவார்கள். அது விநோதமான சங்கேத முறையிலான சொற்களால் அமைந்திருக்கும்.

உச்சநிலையில் தாளவாத்தியக்காரர்கள் சூழ நின்று இசைக்க சாமியாடி அதற்கேற்ப நாட்டியம் ஆடுவார். அது சாமியாட்டம் என்றே அழைக்கப்படும். 

கால்களை மாற்றி கைகளை உயர்த்தி கருவிகளை ஆட்டிக் கொண்டு சுழன்று சுழன்று ஆடுவார். சிலர் அரிவாள்மீதும், ஆணிச்செருப்புகளின் மீதும் நின்றபடி ஆடுவர். அப்போது பெண்கள் குலவையிடுவதும் உண்டு.

சாமியாடுபவரிடமிருந்து திருநீறு பெறுவது முக்கிய நிகழ்வாகும். அனைவரும் அவருடைய காலில் விழுந்து வணங்குவர். சில சாமியாடிகள் திருநீற்றோடு எலுமிச்சம்பழமும் தருவர். அவர் தரும் எலுமிச்சம்பழம் மிகுந்த சக்தியுடையதாக நம்பப்படும்.


சக்தி நிலை நீங்கப் பெறுவதை மலையேறுதல் என்று குறிப்பிடுவர். உடலை முறுக்கிக் கொண்டு உரத்த குரலில் ஓங்கரித்துப் பின்னர் மெல்ல மெல்ல மயக்க நிலைக்குச் செல்வதே மலையேறுதல் ஆகும். சிறிது நேர மயக்கத்திற்குப் பின்னர் சாமியாடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 23: கணியான் கூத்து

கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 



சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. 

இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.

சிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.

இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. 

நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். 

அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நாட்டுப்புற கலைகள் பகுதி 22: இலாவணி

தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்வேறு கலைகளுள் ஒன்று இலாவணி ஆகும். 

தமிழகத்தின் பழமை வாய்ந்த நாட்டுப்புறக் குரலிசைப் பாடற்கலையான இலாவணி மகாராட்டிரம், தெற்கு மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது.


தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் தங்களுடன் இலாவணிக் கலையையும் கொண்டு வந்தார்களென நாட்டுப்புற ஆய்வுகள் வழி அறிய முடிகின்றது.

இலாவணி என்ற சொல்லுக்கு மராத்திய மொழியில் ‘நாற்றுநடுதல்’ என்று பொருள் உண்டு. வயலில் விவசாயப் பணி புரியும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பினை அறியாமலிருக்க, ஒருவரை ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் படியான இயல்பினைப் பெற்றுள்ளது இலாவணிப்பாடல். 

இது ஹோலித்திருவிழாவின் போதும், குழந்தை பிறந்த எட்டு நாட்கள் வரையில், அக்குழந்தைகளைத் தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுவதாக நாட்டுப்புற ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தமிழகத்தில் மாசி மாதக்காலத்தில் நடைபெறும் ‘காமன் பண்டிகையில்’ இலாவணி பாடப்படுகின்ற வழக்கம் இருந்தது.

இலாவணி மராத்தியர்கள் வழிவந்த ஒரு கலை வடிவமாகப் பேசப்படினும், தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்னதாக வேறு பெயர்களில் வேரூன்றி இருந்ததாக ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

தவிர, தமிழ் பேசும் மக்களிடம் வழக்காடுதல் அல்லது எதிர்ப்பாட்டுப் பாடுதல் என்ற வடிவம் தொடக்க காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அவ்வடிவிற்குள் தன்னை எளிதாகப் புகுத்திக் கொண்ட இலாவணிக் குரலிசைப் பாடல்கள், விருத்தமாகவும், ‘துந்தனா’ எனும் நரம்பிசைக் கருவியின் இசைப்பின்னணியிலும் இசைப்பாடலாகப் பாடப்பட்டுள்ளது.

இதில் இசைக்குச் சிறிதளவு இடம் மட்டுமே தரப்படும். சொல் திறமைக்கே பேரளவு இடம் தரப்படும். இலாவணிக் குரலிசைப்பாடற் கலையில் எரிந்தகட்சி, எரியாத கட்சி என்று இரண்டு எதிரெதிர் வடிவங்கள் உண்டு. இந்த எதிர் வடிவத்திற்கு தமிழகத்தில் நிலவிய ‘சைவ-வைணவப் போராட்டமே’ சாராம்சமாகும்.

அதாவது காமனை அரூபமாகக் காமம் எனக் கொள்பவர்கள், காமனை சிவன் எரித்திருக்க முடியாதென்று தங்களை ‘எரியாத கட்சியாகவும்’, காமன் எரிக்கப்பட்டான் என்பவர்கள் ‘எரிந்த கட்சியாகவும்’ தங்களைப் பிரித்துக் கொண்டு பாடுவர். காமனைப் பற்றிய தகவல்களுக்குக் கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம் ஆகியவை அடிப்படையாக அமைந்துள்ளன.

இலாவணியின் தனிச்சிறப்பென்பது,

1) இரண்டு எதிரெதிர் அணிகள் தனக்குத் தரப்பட்டு இருக்கும் தலைப்பினை வலுப்படுத்துவது.

2) எதிர் தரப்பினைக் கேள்விக்கு உள்ளாக்குவது.

3) அவர்களின் கேள்விகளுக்குப் பதிலுரைப்பது என்ற போக்கில் பாடப்படுவதேயாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media.

Wednesday, October 16, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 21: குறவன் குறத்தி ஆட்டம்

குறவன் குறத்தி ஆட்டம் என்பது, குறவர் சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் இசைத்தபடி ஆடும் ஆட்டம் ஆகும்.



இசைப்பதற்கு உடும்புத் தோலால் ஆன கிஞ்சிராவையோ அல்லது டால்டா டப்பாவையோ பயன்படுத்தித் தட்டிக்கொண்டு ஆடுவர்.

வேடம் புனைந்து, இசைக்கருவிகளுடன், பாட்டுப்பாடி ஆடுவதும் குறவன் குறத்தி ஆட்டமாகக் கருதப்படுகிறது. 

தமிழகத்தில் இந்த ஆட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படுகிறது. 

குறவரில் நரிக்குறவர் என்று அழைக்கப்படும் சமூகமக்கள் இவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். 

இக்கலைஞர்கள் சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில், அதிகமாகக் காணப்படுகின்றனர். 

இன்றைய நிலையில் இக்கலை, உயிர்ப்புடன் வாழும் கலையாக இருக்கிறது. இந்த ஆட்டம், கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் திகழ்கிறது.


வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media..

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...