Thursday, October 24, 2019

நாட்டுப்புற கலைகள் பகுதி 22: இலாவணி

தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்வேறு கலைகளுள் ஒன்று இலாவணி ஆகும். 

தமிழகத்தின் பழமை வாய்ந்த நாட்டுப்புறக் குரலிசைப் பாடற்கலையான இலாவணி மகாராட்டிரம், தெற்கு மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது.


தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் தங்களுடன் இலாவணிக் கலையையும் கொண்டு வந்தார்களென நாட்டுப்புற ஆய்வுகள் வழி அறிய முடிகின்றது.

இலாவணி என்ற சொல்லுக்கு மராத்திய மொழியில் ‘நாற்றுநடுதல்’ என்று பொருள் உண்டு. வயலில் விவசாயப் பணி புரியும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பினை அறியாமலிருக்க, ஒருவரை ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் படியான இயல்பினைப் பெற்றுள்ளது இலாவணிப்பாடல். 

இது ஹோலித்திருவிழாவின் போதும், குழந்தை பிறந்த எட்டு நாட்கள் வரையில், அக்குழந்தைகளைத் தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுவதாக நாட்டுப்புற ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தமிழகத்தில் மாசி மாதக்காலத்தில் நடைபெறும் ‘காமன் பண்டிகையில்’ இலாவணி பாடப்படுகின்ற வழக்கம் இருந்தது.

இலாவணி மராத்தியர்கள் வழிவந்த ஒரு கலை வடிவமாகப் பேசப்படினும், தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்னதாக வேறு பெயர்களில் வேரூன்றி இருந்ததாக ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

தவிர, தமிழ் பேசும் மக்களிடம் வழக்காடுதல் அல்லது எதிர்ப்பாட்டுப் பாடுதல் என்ற வடிவம் தொடக்க காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அவ்வடிவிற்குள் தன்னை எளிதாகப் புகுத்திக் கொண்ட இலாவணிக் குரலிசைப் பாடல்கள், விருத்தமாகவும், ‘துந்தனா’ எனும் நரம்பிசைக் கருவியின் இசைப்பின்னணியிலும் இசைப்பாடலாகப் பாடப்பட்டுள்ளது.

இதில் இசைக்குச் சிறிதளவு இடம் மட்டுமே தரப்படும். சொல் திறமைக்கே பேரளவு இடம் தரப்படும். இலாவணிக் குரலிசைப்பாடற் கலையில் எரிந்தகட்சி, எரியாத கட்சி என்று இரண்டு எதிரெதிர் வடிவங்கள் உண்டு. இந்த எதிர் வடிவத்திற்கு தமிழகத்தில் நிலவிய ‘சைவ-வைணவப் போராட்டமே’ சாராம்சமாகும்.

அதாவது காமனை அரூபமாகக் காமம் எனக் கொள்பவர்கள், காமனை சிவன் எரித்திருக்க முடியாதென்று தங்களை ‘எரியாத கட்சியாகவும்’, காமன் எரிக்கப்பட்டான் என்பவர்கள் ‘எரிந்த கட்சியாகவும்’ தங்களைப் பிரித்துக் கொண்டு பாடுவர். காமனைப் பற்றிய தகவல்களுக்குக் கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம் ஆகியவை அடிப்படையாக அமைந்துள்ளன.

இலாவணியின் தனிச்சிறப்பென்பது,

1) இரண்டு எதிரெதிர் அணிகள் தனக்குத் தரப்பட்டு இருக்கும் தலைப்பினை வலுப்படுத்துவது.

2) எதிர் தரப்பினைக் கேள்விக்கு உள்ளாக்குவது.

3) அவர்களின் கேள்விகளுக்குப் பதிலுரைப்பது என்ற போக்கில் பாடப்படுவதேயாகும்.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை

Collected from Social Media.

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...