Saturday, June 9, 2018

சித்த மருத்துவக் கலை

கலை ஒரு தனி வகை. இரண்டு எழுத்துக்கள் உள்ள ஒரு சொற்களை கொண்ட “தனி வகை” என்ற இச்சொற்றோடர் “தனிப் பிரிவு” என்றாகி, ஒப்பற்ற பிரிவு என்ற பொருளையும் தந்து மிகவும் உயர்ந்து நிற்பதை கண்டு மகிழலாம்.



உயர்வு

எல்லாக் கலைகளையும் கண்டு, அறிந்து, போற்றி, வளர்த்து, துய்த்து, மகிழ்ந்து வாழ்வதற்கு, உடலைப் பாதுகாத்து ஆக வேண்டும். ஆதலின், உடல் ஓம்பும் இம்மருதுவக் கலை எல்லாக் கலைகளிலும் உயர்ந்து நிற்பது இயல்பேயாகும்.

காலம்

சித்த மருத்துவமும் தமிழ் மருத்துவமும் ஒன்றே. இம்மருத்துவம் பிறந்த காலத்தை அறிந்து கூற இயலாது. கூற வேண்டுமானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலமே தமிழ் மருத்துவம் தோன்றிய காலம் என்று துணிந்து கூறலாம்.

மொழி

நாட்டு வைத்தியம் என்று பொதுவாகக் குறிப்பிடுவது மூன்றை. ஒன்று சித்த மருத்துவம்; இரண்டு, ஆயுர்வேதம்; மூன்று யுனானி. தமிழ் மருத்துவத்திற்கு மொழி தமிழ். ஆயுர்வேதத்திற்கு மொழி வடமொழி. யுனானிக்கு மொழி உருது. யுனானிக்கு திசை மேற்கு; ஆயுர்வேதத்திற்கு திசை வடக்கு; சித்த வைத்தியத்திற்கு திசை தெற்கு.

மருந்து 

தமிழ் மருந்துகள் பெரும்பாலும் பொடியும் கியாழமுமாகவும் இருக்கும். இதனை பசுபம்(பஸ்பம்) என்றும், கசாயம் என்றும் சொல்லுவார்கள். ஆயுர்வேத வைத்தியம் பெரும்பாலும் தைலமும் திராவகமுமாக இருக்கும். யுனானி மருந்துகள் பெரும்பாலும் அல்வாவும் லேகியமுமாக இருக்கும்.

பஸ்பம்

இரும்பு, வெள்ளி, தங்கம், செம்பு, முதலிய உலோகங்கள் ஒன்பது. முத்து, மணி, பவழம் முதலிய இரத்தினங்கள் ஒன்பது. வீரம், பூரம் முதலிய பாசாணங்கள் ஒன்பது. இதனை முறையே நவ லோகம், நவ இரத்தினம், நவ பாசாணம் என்பர். இந்த மூவொன்பது இருபத்தேழையும், பசுபமாக்கும் முறை சித்த வைத்தியத்தில் மட்டுமே உண்டு. பிற மருத்துவ முறைகளில் இவற்றில் சில பசுபமாகச் செய்யப்படும். எனினும், அதன் மூலம் சித்த வைத்திய முறையாகவே அமைந்திருக்கும்.

எளிது

அலபதி முறையில், இவற்றை சிலவற்றை பசுபமாக்குகிறார்கள். ஆனால் விலையுயர்ந்த இயந்திரத்தில், அதிகச் சம்பளம் வாங்குகிறவர்களின் கண்காணிப்பில், பெரும் பொருட்செலவில், அவை செய்யப்படுகின்றன. சித்த வைத்திய முறையிலோ இரண்டு மூன்று ‘வரட்டி’ களைக் கொண்டு சில மூலிகைகளின் சாறுகளை தடவி எளிய முறையில், குறைந்த செலவில், சுருங்கிய நேரத்தில் இவை அனைத்தும் பசுபமாக்கப் பெற்று வருகின்றன.

உணவே மருந்து

சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது. காய்கறிகளெல்லாம் மருந்து. கீரை வகைகளெல்லாம் மருந்து. கடுகு, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், சுக்கு, திப்பிலி முதலிய கடைச் சரக்குகளெல்லாம் மருந்து. சுருக்கமாக சொல்லப் போனால் நாட்டு பசுவின் பால், தயிர், மோர், வெண்ணை, நெய் அனைத்துமே மருந்து. உணவே மருந்தாக அமைகின்ற இவையே சித்த வைத்திய முறையாகும். தமிழகத்தைத் தவிரப் பிற நாடுகளில் உணவுப் பொருள்களே மருந்தாக அமைகின்ற முறை காண முடியாது. தமிழகத்து தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப, தமிழ் மக்களுக்கு தோன்றும் பிணிகளுக்குத் தமிழக மண்ணில் முளைக்கின்ற செடி, கொடிகளை மருந்தாக தருவதே தமிழ் மருத்துவ முறையாகும்.

கை வைத்தியம்

தாய்வழி மகள் காதுவழி கேட்டுக் கை வைத்தியமாக செய்யப்படுகின்ற ஒரு முறையும் தமிழகத்தில் உண்டு. இதையே சித்த வைத்தியம் என்றும், தமிழ் மருத்துவம் என்றும், வீட்டு வைத்தியம் என்றும் கூறுவதுண்டு. இந்த தலைமுறையில் நகரங்களில் வாழ்கின்ற படித்த பெண்கள் இம்முறைகளை அடியோடு கைவிட்டுவிட்டனர். எனினும் சிற்றூர்களில் உள்ள எளிய குடும்பங்களிலும் இம்முறை என்னும் இருந்து வருகிறது.

சிறப்பு

சித்த வைத்தியம், காலத்தால் முந்தியதும் விலையால் குறைந்ததும், கையாள்வதில் சிறந்ததும், பலனால் மிகுந்ததும், தகுதியால் உயர்ந்ததுமாகும். இவ்விதம் இருந்தும், மக்களின் உணர்ச்சி குறைவும், அரசினர் கவனக் குறைவும் ஒன்று சேர்ந்ததினாலேயே இச்சித்த வைத்திய முறை மறையத் தொடக்கிவிட்டது.

ஒத்தை மருந்து

சித்த வைத்தியத்தில் ஒத்தை மருந்து என்று சில மருந்து உண்டு. அது, பூண்டு ஒரு மருந்து, கடுகு ஒரு மருந்து, வெங்காயம் ஒரு மருந்து, தேங்காய் ஒரு மருந்து. அந்த ஒன்றையும், எதையும் சேர்க்காமல், அரைக்காமல், காய்ச்சாமல், நிறுக்காமல், உருக்காமல் அப்படியே கொடுக்கச் சிற்சில நோய்கள் தீரும். இதை வடமொழியினர் “ஏக மூலிகைப் பிரயோகம்” என்பர். அவற்றுள் சில:
1. பாம்பு கடித்தால் வாலைப் பட்டையில் உள்ள சாற்றை பிழிந்து கொடுக்க உடனே குணமாகும்.
2. பூரான் கடித்தால் பனை வெல்லத்தையுண்டால் அதன் தடிப்பு உடனே மாறும்.
3. பிறந்த குழந்தை தவறிப்போய்ப் பெற்ற தாய்க்குப் பால்கட்டி முலைக்குத்தல் ஏற்பட்டால் மல்லிகைப் பூ வைத்து கட்ட உடனே குணமாகும். மல்லிகை பூ கிடைக்காத காலங்களில் வாழைப் பிஞ்சை அரைத்து தடவிக் குணமாக்கலாம்.
4.  நட்டுவாக்காலி கடித்தால் கொப்பரைத் தேங்காயை மென்று தின்ன உடனே குணமாகும்.
5. இந்த ஒத்தை மருந்தும் ஒரு வேளைதான். இரண்டாம் வேளை மருந்து தேவை இல்லை.
இம்மாதிரி முறைகள் நூறு “தமிழ் மருந்துகள்” என்ற நூலில் என்னால் வெளியிடப் பெற்றிருக்கிறது. உயர்ந்த அறுவை சிகிச்சை முறைகளும் சித்த வைத்தியத்தில் உண்டு.

அழிவு

தமிழ் மருத்துவ முறை அழிவதற்கு தமிழ் மருத்துவர்களும் ஒரு வகையில் காரணமாயினர். வறுமை வாய்ப்பட்ட மக்களில் சிலர் தங்களை மருத்துவர் என்று சொல்லியும், தங்களிடமிருந்தது மருந்து என்று கூறியும், தவறு செய்தமையால் பொது மக்களின் நம்மிக்கை கெடத் தொடங்கியது. மருத்துவ நூல்களில் உள்ள கவிதைகளையும் அதில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட மருந்துகளின் பெயர்களையும் அறியாமலும் புரியாமலும் இளம் மருத்துவர்கள் சிலர் தவறு செய்யத் தொடங்கினர். இதனால் பொது மக்கள் சிறந்த பண்டிதர்களையும் உயர்ந்த மருத்துவர்களையும் சந்தேகிக்க தொடங்கினர். இவையும் சித்த வைத்திய முறை அழிவிற்குக் காரணமாயின.

புதைந்து போனது

சித்த வைத்திய முறையில் சிறந்து விளங்கிய மருத்துவ மேதைகளும், பண்டிதர்களும் தங்களிடம் உள்ள உயர்ந்த முறைகளை வெளியே காட்டமலும், பிறருக்கு சொல்லாமலும், தனக்குப் பின் வாரிசாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து சொல்லி வைக்காமலும், அரசினருக்கு அறிவிக்காமலும், நூல்களாக எழுதி வைக்காமலும் மறைந்து போயினர். மறைய மறைய, ஒவ்வொரு சித்த வைத்தியரையும் புதைக்க புதைக்க, சில சித்த வைத்திய முறைகளும் புதைக்கப் பெற்றே போயின.

அழிந்த காரணம்

இந்த தவற்றை நமக்கு முன்னே வாழ்ந்த பெரியோர்கள் செய்யவில்லை. அவர்கள் தாங்கள் கண்ட அருமையான முறைகளைக் சுவடுகளில் எழுதி வைத்தனர். ஆனால், அச்சு பொறிகள் இன்மையாலும், ஓலைகளிலேயே எழுதிக் குவிக்க வேண்டியிருந்தமையாலும், விரிந்த சொற்களில் உள்ள பரந்த முறைகளை, சொற்களைக் குறைத்து கவிதைகளாய் அமைத்துச் சுவடிகளாக்கி வைத்து போயினர். 

அவை, தமிழ் மன்னர்களுடைய ஆட்சி அழிந்தமையாலும், ஆங்கில ஆட்சியினரின் அக்கறைக் குறைவினாலும், காலத்தில் பாழ்பட்டும், கடற்கோள்களின் அழிவிற்குள்ளாகியும், கரையான்களால் தின்னப்பட்டும் பல சுவடிகள் அழிந்து போயின. இவை அனைத்திற்கும் தப்பிச் சில நூல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இவற்றையுங்கூட, பழஞ்சுவடிகளை ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம் என்ற கொள்கை பரப்பப்பட்டதினால், அந்த புண்ணியத்திற்கு ஆசைப்பட்டு மீதமிருந்த பழஞ்சுவடிகளையும் சிலர் ஆற்றில் அள்ளிப் போட்டு அமைதி அடைந்தனர்.

அழிந்து போன மருத்துவ நூல்கள்:

1. அகத்தியர் – பன்னிரு காண்டம்
2. போகர் – எண்ணாயிரம் 
3. கோரக்கர் மூலிகை பலன் – ஆயிரம் 
4. கொங்கணவர் – மூவாயிரத்து நூறு
5. கோரக்கர் – வெண்பா ஏழாயிரம்
6. மச்ச முனி – ஏழு காண்டம்
7. சிவ வாக்கியர் – ஐந்து காண்டம்
8. காசிபர் வண்ணம்
9. உரோம முனி வடுகம்
10. இராமதேவர் சந்தப் பா
11. நந்தீசர் சந்தம்
12. சங்குமா முனி கலித்துறை
13. திருமூலர் திருமந்திரம் – எண்ணாயிரம்
14. பதஞ்சலி ஏழு காண்டம்
15. சட்ட முனி நிகண்டு
16. சட்ட முனி – இரண்டாயிரத்து எழுநூறு
17. காலாங்கி நாதர் – நாலு காண்டம்
18. போகர் – எழுநூறு. முதலியன.

இரத்தக் கண்ணீர்

இவை அனைத்தும் தமிழகத்துச் சான்றோர்களாகிய சித்தர் பெருமக்களால் தமிழ்மொழியில் தோற்றுவிக் பெற்றவை. இவை அனைத்தும் அழிந்து போயின என்பது சிற்சில பாடல்கள் கிடைத்திருப்பதானாலும், சிற்சில நூல்களில் மேற்கோள்களாக வந்திருப்பதாலும் அறிய முடிகிறது. இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ? என்னென்ன பெயரில் இருந்தனவோ, அவற்றுள் என்னென்ன புதையல்கள் இருந்தனவோ? அவற்றின் ஆசிரியர்கள் யார் யாரோ? அறிய முடியவில்லை. அவை அனைத்தும் என்று இருந்திருந்தால்......? நினைத்தாலே நெஞ்சம் புண்ணாகிறது. அழுதால் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீரே சொட்டுகிறது. என்ன செய்வது.

விருப்பம்

இந்த இழிநிலை மாற வேண்டும். மக்கள் சித்த வைத்தியத்தின் அருமை பெருமைகளை உணர வேண்டும். தாய்வழி மகள் வாய்வழிக் கேட்டு கை வைத்தியமாகச் செய்யும் முறை தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும். மருத்துவத்திற்காகச் செலவழிக்கும் பெரும் பொருள் மிச்சப் பட வேண்டும். சிற்றுர்களிளெல்லாம் தமிழ் மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும். சித்த வைத்திய பள்ளிகளும், கல்லூரிகளும் தமிழகத்தில் பெரும்பான்மையாகத் திறக்கப் பட வேண்டும்.

மருத்துவர் தலைவன்

உலகுக்கு முதன்முதலில் மருத்துவக் கலையை வழங்கியவர்கள் நம் முன்னோர்கள். அவர்களில் சிலர் தமிழ் சான்றோர். அவர்களில் சிலர் சித்தர்கள். அவருள்ளும் ஒருவர் எல்லாம்வல்ல சித்தராகிய இறைவன். அவர் கோவில் கொண்ட இடங்கள் தமிழகத்தில் பல.

முடிவு

உடற் பிணிக்கும், உளப் பிணிக்கும், உயிர்ப் பிணிக்கும் சேர்த்து மருந்து வேண்டுவோர் சித்த மருத்துவத்தையே நாடுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சித்த மருத்துவத்தை போற்றிப் பேணி நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோம். வாழ்க தமிழ்! மொழி வளர்க சித்த மருத்துவம்!

                                                                   “முத்தமிழ் காவலர்” திரு கி. ஆ. பே. விசுவநாதம் அவர்கள்

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை  
Collected from Social Media...

No comments:

Post a Comment

நம்முடைய இந்து சமயத்தில் தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!!

1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை,...